திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள்
----------------------------------------------------------------ஈரோடு நகரிலிருந்து இந்தக் கோயில் ஏறக்குறைய 18 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 1250 படிக்கட்டுக்கள் கொண்ட இம்மலையின் உச்சியில் இருப்பது செங்கோட்டு முருகன் ஆலயமும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும் ஆகும். மலை அடிவாரத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது.திருச்செங்கோட்டு ஆலயம் ஒரு தெய்வத்தை மட்டும் சிறப்பிக்கும் நிலையில்லாது சிவஸ்தலம், செங்கோட்டு முருகனின் தலம், நாகதேவர் ஸ்தலம் என மூன்று வகையில் இக்கோயில் மக்களால் அறியப்படுகின்றது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர ஆலயம் என்பது மட்டுமல்லாது இப்புண்ணியத் ஸ்தலத்திற்கு மேலும் பல பெயர்கள் அமைந்திருக்கின்றன.
கொடிமாடச் செங்குன்றம் / கொடிமாடச் செங்குன்றூர்
- தெய்வத்திருமலை
- நாககிரி
- அரவாகிரி
- உரகவெற்பு
- கட்செவிக் குன்றூர்
- பணிமலை
- தந்தகிரி
- நகபூதரம்
- புசகபூதரம்
- நாகாசலம்
- நாகமலை
- முருகாசலம்
- தாருகாசலம்
- திருவேரகம்
என்ற பெயர்களும் வழங்கப்பெற்றுள்ளன என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
நாகதேவருக்கு இங்கு ப்ரத்தியேகமான சன்னிதானம் அமைந்திருப்பதால் நாகத்தின் பெயரை உள்ளடக்கிய வகையில் நாககிரி, அரவகிரி, உரகவெற்பு போன்ற பெயர்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்று.
இக்கோயில் அமைந்திருக்கும் மலை
- கோதமலை
- முத்தலை
- கடகமலை
- துர்க்கைமலை
- முத்திமலை
- வாயுமலை
- பொறுதுமலை
- வந்திமலை
- அழகுமலை
- தாருமலை
- சூதமலை
- தவமலை
- அனந்தன்மலை
- தங்கமலை
- யோமலை
- மேருமலை
- கொங்குமலை
- கத்தகிரி
- ஞானகிரி
- இரத்தகிரி
- கோணகிரி
- பிரம்மகிரி
- தீர்த்தகிரி
- தர்மகிரி
- கந்தகிரி
- பதுமகிரி
- தேதுகிரி
என்று தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றது என்று திருச்செங்கோட்டு ஸ்தல புராண நூல் கூறுகின்றது.
உயர்ந்து செல்லும் மலையின் பாதையின் இடப்புறமாக உள்ள பெரும் பாறையில் எளிதாக பாம்பொன்று ஐந்து தலையுடன் செதுக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் சின்னஞ்சிறிய வடிவில் பாம்புகள் உள்ளன பெரிய நாகம் ஆதிசேடனின் அங்கம் என்பர். கங்கை யமுனை சரஸ்வதி என்று கல்வெட்டுகளில் உணர்த்தப்படும் மூன்று சிறிய சுனைகள் உள்ளன.
பிற்காலச் சோழர் சோழர்களும் பாண்டியர்களும் கோயிலுக்கும் கோயில் காரியம் பார்க்கும் அந்த இருக்கும் நிபந்தங்களும் உரிமைகளும் பலவாறு செய்யப்பட்டது பற்றி கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் அரசர்கள் காலத்தில் எழுந்த கல் எழுத்துக்களின் அமைப்பில் வடிவ மாறுபாடுகள் மல்கி இருப்பதால் பழைய கல்வெட்டுகளின் செய்தி முறைமைக்கு மாறாக உரிமை ஒன்றையே குறிப்பாக கொண்டிருப்பதாலும் பிற்கால முயற்சியின் காரணமாக தோன்றிய கல்வெட்டுகள் என்று இவற்றைக் கருதவேண்டியுள்ளது என்று கல்வெட்டு அறிஞர் கோவிந்தராசனார் கூறுகிறார்.
வட்ட எழுத்துக்களில் ஐந்து வரி உள்ள கல்வெட்டு ரிஷப மண்டபத்தில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
திருச்செங்கோடு வட்டத்தில் - 81 கல்வெட்டுக்கள் இது வரை படி எடுக்கப்பட்டுள்ளன.
மலைப்படிக்கட்டுகளின் ஓரத்தில் உள்ள மலையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோவிலுக்குப் பங்களித்த மன்னர்கள் மற்றும் தனிநபர்கள் சோழ மன்னர் 1ஆம் ராஜேந்திரன் (கி.பி. 1032), சோழ மன்னர் இராஜகேசரி வர்மன் (10ஆம் நூற்றாண்டு), சோழ மன்னர் (கொங்கு - 13ஆம் நூற்றாண்டு), சோழ மன்னர் 3ஆம் ராஜேந்திரன் (கொங்கு சோழராக இருக்கலாம்)( 13ஆம் நூற்றாண்டு. ), பாண்டிய மன்னன் 2ஆம் சடையவர்ம சுந்தரன் (13ஆம் நூற்றாண்டு), கொங்கு சோழன் வீர ராஜேந்திரன் (13ஆம் நூற்றாண்டு), விஜயநகர் (16ஆம் நூற்றாண்டு), வீரபிரதாப கிருஷ்ணராய மகாராயர், கிருஷ்ணதேவ மகாராயர், சதாசிவ மஹாராயர், நல்லதம்பி காங்கேயன், ஆத்தப்ப நல்லதம்பி காங்கேயன் (13ஆம் நூற்றாண்டு) நூற்றாண்டு ) குமாரசாமி காங்கேயன் , நாயக்கர் விஸ்வநாத சொக்கலிங்கன் , விஜயநகரம் ( 17 ஆம் நூற்றாண்டு ) நாயக்கர் சொக்கநாதன் , நரசிம்ம உடையார் , நாயக்கர் போத்து 9 18 ஆம் நூற்றாண்டு ). மேற்கண்ட சோழ மன்னன் 3வது ராஜேந்திரன் தான் அதிகபட்ச பங்களிப்புகளை பெற்றுள்ளார். பரிகாரம் என்ற பெயரில் பாம்பு புடைப்புகளை வெட்டி இந்த கல்வெட்டுகள் அழிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது.
ராஜகேசரி வர்மன், பரகேசரி வர்மன் காலத்துக் கல்வெட்டுக்கள் பிராமண போஜனம் செய்விக்க ஏற்படுத்திய நிபந்தங்களைக் கூறுகின்றன.
அறுபதாம் படிப்பக்கம் மதுரை கொண்ட பரகேசரி வர்மனது வெற்றிகளைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவை அக்காலத்தில் கிராம சபைகள் எப்படி நடந்தன என்பதையெல்லாம் குறிக்கின்றன.
திருச்செங்கோட்டில் சில செப்பு பட்டயங்களும் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கிருஷ்ண தேவராயன், மதுரை திருமலை நாயக்கர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. இவற்றில் சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளின் மூலமாகவே பெரும்பாலான திருமலையில் நடைபெற்ற திருப்பணிகள் மற்றும் திருக்கோயிலை பற்றிய செய்திகளை நாம் அறிகிறோம். விஜயநகர மன்னர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது பிரதிநிதிகளாக செயல் பட்டவர்கள் மன்னரின் ஆனையை ஏற்று இப்பகுதியில் பெரும்பாலான நற்பணிகளை செய்துள்ளனர். அவர்களில் குறிப்பாக கிபி 16-ம் 17-ம் நூற்றாண்டில் திருச்செங்கோட்டுக்கு அருகே உளள மோரூரில் வசித்த வந்த கண்ணங்கூட்டத்தை சேர்ந்த திப்பராச உடையார், திரியம்பக உடையார் மற்றும் நரசிம்ம உடையார் அவர்களை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. அதே போல் திருமலையில் அத்தப்ப நல்தம்பி காங்கேயன் மற்றும் இவரது மகன்களான அத்தப்ப இம்முடி காங்கேயன், குமாரசாமி காங்கேயன் ஆகியோரின் பெயர்களும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன.
கிபி 1509 முதல் 1565 வரை விஜயநகர பேரரசு கிருஷ்ண தேவராயர் ஆட்சிகாலத்தில் அவர் சார்பாக இங்கு ஆட்சி செய்து வந்தவர்களின் தலைமையின் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.
கிபி 1550-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த நரசிங்க ராமாஞ்சி என்பவரால் திருமலையில் வடகோபுரமாகிய ராஜகோபுரத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்து மூலம் செயயப்பட்டது. கயிலாயநாதர் கோயில் முன் நிறுவப்பட்டுள்ள 60 அடி கம்பமும் இவர் காலத்தில் தான் நிறுவப்பட்டது.
கிபி 1608-ல் சங்ககிரி துர்க்கத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாரிராஜந்திர மகிபன் என்பவரால் ஆதிகேச பெருமாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. இது நடைபெற்று சுமார் 400 ஆண்டுகளாகிறது.
இவரின் காலத்தில் தான் கிபி 1617-ல் கையிலாயநாதர் ஆலயத்தின் முன் கோபுரம் பூர்த்தி செய்யப்பட்டது. இன்றைக்கு சுமார் 390 ஆண்டுகளாகிறது.
கையிலாயநாதர் ஆலயத்தின் கோபுரவேலை முடிந்து சுமார் 62 ஆண்டுகளுக்கு பிறகு கிபி 1679-ல் சங்ககிரி ஆட்சி பீடத்தில் இருந்த தேவராசேந்திர ரகுபதி என்பவரால் கையிலாயநாதர் ஆலயத்தின் வாயிற் நிலைக்கதவு செய்யப்பட்டது.
கிபி 1599ல் மோரூர் கண்ணங்குலம் வேலபூபதி சந்ததி வெற்றி குமாரசாமி என்பவரால் அர்த்தநாரீஸ்வரரின் கிழக்கே உள்ள நந்தி, பலிபீடம் முதலியன நிறுவப்பட்டது.
கிபி 1588-ல் மதுரையை ஆண்ட விசுவநாத சொக்கலிங்க நாயக்கர் ஆட்சியில் திருக்கோயிலுக்கு நில தானம் செயயபபட்டதாக சுப்பரமணி சுவாமி கோவிலுக்கு வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1522-ல் கிருஷ்ணதேவராயர் காலத்தில் சோழமண்டலத்தை சேர்ந்த திரியம்பக உடையார் அர்த்தநாரீஸ்வருக்கு திருவிழா நடத்துவதற்கு நகரின் பல வரிகளை தானமாக கொடுத்ததாக அறியப்படுகிறது.
1619-ல் இம்முடி நல்லதம்பி காங்கேயன் செங்கோட்டுவேலவர் மண்டபத்தையும், அர்த்தநாரீஸ்வரர் மண்டபத்தையும் கட்டினார்.
கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாய்க்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர் என இங்குள்ள தற்காலக் கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது.
மலை மீது அமைந்துள்ள இக்கோயில் பண்டைய காலத்தில் நாக வழிபாட்டினையும், வேட்டுவர்கள் தங்களின் குலதெய்வமான பெண் தெய்வத்தை வணங்கிய இடமாகவும் திகழ்ந்துள்ளது.
திருச்செங்கோடு ஆனங்கூர் ரோட்டில், கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் குளம் வெட்டபட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. 400 ஆண்டு பழமையும், வரலாற்று பெருமையும் கொண்ட தெப்பகுளத்தில், 30 அடி ஆழத்தில் ஐந்து நீருற்று கிணறுகளும் உள்ளன. இங்கு தான் அர்த்தநாரீஸ்வரர் தெப்ப உற்சவம் நடைபெறும். நீருற்று கிணற்றின் பக்க சுவற்றில் கிருஷ்ணதேவராயர் ஆட்சி கால கல்வெட்டு இன்றும் அழியாமல் உள்ளது.
இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.
மலையின் மீது அமைந்துள்ள பாழடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலைமேலே அக்காலத்திலே கோட்டை ஒன்று இருந்தது என்பதற்குக்கூடச் சான்றுகள் கல்வெட்டில் கிடைக்கின்றன. இன்று அக்கோட்டையின் சின்னம் முழுவதும் அழிந்து போயிருக்கிறது. கோட்டை போய்விட்டது. கோட்டை வாசல் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.
No comments:
Post a Comment