நெகனூர்பட்டி- தமிழ் பிராமி ( Neganur patti ).
நெகனூர்பட்டி (Neganur Patti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், நெகனூர் ஊராட்சியில் நெகனூர்பட்டி எனும் கிராமத்தில் ஒரு சகிமீ பரப்பில் அமைந்த சமணப் பண்பாட்டுத் தொல்லியல் தலமாகும். நெகனூர்பட்டி சமணப் பண்பாட்டுத் தலம் செஞ்சி நகரத்திற்கு வடகிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ளது.
சிறுகுன்றுகள் சூழ்ந்த நெகனூர்பட்டியை அடுக்கங்கள் என்பர். இக்குன்றுகள் சிறுகுகைகள் கொண்டது. இக்குகைகளில் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள், தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மற்றும் சமணர் படுகைகள் கொண்டுள்ளது.
பெரிய பாறையின் கீழ் வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியம், கைகளில் எதையாவது வைத்திருப்பது, விளையாடுவது போன்ற பல்வேறு செயல்களைக் கொண்ட மனிதர்களைக் கொண்டுள்ளது. ஓவியங்கள் வெள்ளை காவியால் வரையப்பட்டுள்ளன. இது 5000 - 6000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
- பெரும்பொகழ்
- செக்கந்தி தயிரு
- சேக்கந்தண்ணிசெ
- ய்வித்த பள்ளி
என்பது கல்வெட்டு வாசகமாகும். பெரும்பொகழ் என்ற ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்பவரின் தாயான சேக்கந்தண்ணி என்பவர் இந்த பள்ளியைச் செய்வித்தார் என்பது இதன் பொருளாகும். முதல்வரி கடைசி எழுத்து ”ழ்”. க. இராசவேலுவால் “ய்” என்று படிக்கப்பட்டது. இரண்டாம் வரி கடைசி எழுத்து ”ரு”, எம்.டி சம்பத்தால் “உ” என்று படிக்கப்பட்டது.
கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டில் சேக்கந்தண்ணி என்பதை சேக்கந் அண்ணி என்று பிரித்துப் படிக்க வேண்டும். இவரைச் சமணப் பெண் துறவியாகக் கொள்ளலாம். சேக்கிழார் என்பதில் “சே” குடிப் பெயராக இருப்பது போல இங்கும் குடிப்பெயர் எனக்கருதலாம். “சே” என்பது காளை என்ற பொருளில் அகப்பாடலில் ( அகம் 36 “கயிறு இடு கதச் சேப்போல” ) குறிக்கப்படுகின்றது. கந்தி என்ற சொல் சீவக சிந்தாமணியில் ( 26:49 கறந்த பால் அணைய கந்தி ) பெண் துறவி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. சூடாமணி கந்தி கௌந்தி என்ற சொற்களுக்கும் பெண்துறவி என்று பொருள் சொல்கிறது. தாயிரு என்பது தற்கால கன்னட மொழியில் தாயாருக்கு வழக்கு சொல்லாக உள்ளது. அண்ணி என்பது மரியாதைச் சொல்லாக பயன்பட்டுள்ளது. பெரும்புகை என்றொரு ஊர் அருகில் உள்ளது. அங்குள்ள குன்றிலும் கற்படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டில் சொல்லப்படும் பெரும்பொகழ் இன்றைய “பெரும்புகை” யாக இருக்கலாம்.
இந்தியா முழுவதும் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக் களில் பெரும்பாலும் பிராகிருத மொழி இடம் பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுக்களில் தமிழ் மொழி மட்டுமே இடம் பெறுகிறது. சில பிராகிருத வரிவடிவங்கள் (ஸ, த4) மற்றும் ஒரு சில பிராகிருத சொற்கள் (த4 ம்மம் ஸாலகன்) மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே எழுத்து ஒற்றுமையிருப்பினும் மொழி மற்றும் சில சிறப்புத் தன்மைகள் காரணமாக சங்க காலத்தில் கிடைக்கும் பழந்தமிழ் எழுத்துக்களை இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்திலிருந்தும் அசோக பிராமி எழுத்திலிருந்தும் வேறுபடுத்தும் முகமாக வழங்கப்பெற்ற பெயரே “தமிழி” அல்லது “தமிழ் பிராமி” என்பதாகும்.
தமிழகத்தில் கிடைக்கும் பிராமி எழுத்திற்கு “தமிழ் பிராமி” என்று பெயரிட்டவர் ஐராவதம் மகாதேவனாவார். அதுபோல் “தமிழி” என்று பெயரிட்டவர் நாகசாமியாவார். இதனை “தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்” என நடன காசிநாதன் மற்றும் சு.இராசவேல் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.
இவ்வெழுத்துக்களின் தன்மை (Nature of Inscriptions)
பழந்தமிழ் எழுத்துகள் சமணர்கள் வாழ்ந்த குகைகளிலேயே பெரும்பாலும் காணக் கிடைகின்றன.
பொது ஆண்டிற்கு முன் (கி.மு.விற்கு பதிலாக பொ.ஆ.மு -பொது ஆண்டிற்கு முன் என்பது வழங்கப்படுகிறது.)
பொ.ஆ.பி. (கி.பி.க்கு பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது).
சமண குகைகளில் காணப்பட்டாலும் சமண சமயத்தைப் பற்றியோ அதன் கொள்கைகள் பற்றியோ குறிப்பிடவில்லை.
இவர்களுக்கு அமைத்துக் கொடுத்த இருக்கையும் அதனை அமைத்துக் கொடுத்தவர் பெயர் மற்றும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் குறித்தே கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளன. ஸ, த3 போன்ற ஒரு சில பிராகிருத சொற்கள் இடம் பெறுகின்றன.
பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப்பெற்றுள்ளன.பாறைகளில் மட்டுமின்றி நடுகற்கள், மட்பாண்டங்கள், காசுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலும் இவ்வெழுத்துக்கள் பொறிக்கப் பெற்றுள்ளன.
புலிமான் கோம்பை, தாதப்பட்டி, திண்டுக்கல், (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், பொற் பனைக் கோட்டை (புதுவை)) ஆகிய மூன்று இடங்களில் கிடைத்த 5 கல்வெட்டுகள் மட்டுமே நடுகற்களாக வுள்ளன. இவையே இதுவரை கிடைத்த தமிழி கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டதாக உள்ளன.
இதுவரை 32 இடங்களிலிருந்து 95 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன